Wednesday, 20 May 2015

கீ:11 வந்தனம் வந்தனமே

Vanthanam Vanthaname

சங்கராபரணம் 

சாபுதாளம் 

வந்தனம் , வந்தனமே ! தேவ துந்துமி கொண்டிதமே - இது 
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே , மிகத் தந்தனம் .

1. சந்ததஞ்சந்ததமே , எங்கள் தகுநன்றிக் கடையாளமே - நாங்கள் 
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே - எங்கள் 
சாமி , பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே !

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே - சத்ய 
சருவேசுரனே , கிருபாகரனே , உன் சருவத்துக்குத் துதியே .

4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் - பார்த்தால் 
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

5. மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்றன் 
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .

                                                                                                             -வே . மாசிலாமணி


கீ: 193 (225) எல்லாம் இயேசுவே

Ellam Yesuve

சங்கராபரணம் 

ஆதிதாளம் 

எல்லாம் இயேசுவே - எனக்கெல்லாம் மேசுவே .

தொல்லைமிகு மிவ்வுலகில் - தோழர் ஏசுவே .

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் ,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் .     -எல் 

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் ,     -எல் 

3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
கஷ்ட நோய் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் .     -எல் 

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் 
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் .     -எல் 

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் 
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் .     -எல் 

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .     -எல் 

                                                                                                              
                                                                                                                  யே. ஞானமணி

 

 

Sunday, 17 May 2015

கீ: 1 சத்தாய் நிஷ்களமாய்

Satthaai Nishkalamaai

சங்கராபரணம்

ரூபகதாளம்


1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் ,
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே ,
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்-து ;
அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை , யாருறவே ?

2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மா றுண்டுகொலோ ? கடைகாறுங் கையடையாய் ,
சும்மா ரட்சணைசெய் , சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே ?

3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான் ,
பரசேன் பற்றுகிலேன் ; என்னைப்பற்றிய பற்றுவிடாய் ,
அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே ?

4. தாயே தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் ,
நீயே எம்பெருமான் , கதிவேறிலை நிண்ணயங்காண் ;
'ஏயே ' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை ?
ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை , யாருறவே ?

5. துப்பார் சின்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் 
தப்ப தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள ,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமே டுத்த எங்கள் 
அப்பா , உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே ?

எ . ஆ . கிருஷ்ணபிள்ளை
 

Saturday, 16 May 2015

கீ:317 (377) அனுக்ரக வார்த்தையோடே

Anukraga vaarthaiyode

 

சங்கராபரணம்

ஆதிதாளம் 

1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது 
அடியாரை அனுப்புமையா !
மனமதில் தயவுறும் மகத்துவபரனே !
வந்தனம் உமக்காமென்.

2. நின்திரு நாமமதில் - கேட்ட 
நிர்மலமாம் மொழிகள் 
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் 
சாமி நின்னருள் புரிவாய்.

3. தோத்திரம் புகழ் மகிமை ,- கீர்த்தி 
துதி கனம் தினமுமக்கே 
பாத்திரமே ; அதிசோபித பரனே !
பாதசரண் ஆமேன் !


ச.ஜெ.சிங்

கீ: 227 (270) ஜீவ வசனம் கூறுவோம்

Jeeva vasanam kooruvom

மோகனம் 

ஆதிதாளம் 


ஜீவ வசனங் கூறுவோம் ,- சகோதரரே ;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம் .

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த 
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.    -ஜீவ 

1. பாதகப் பேயின் வலையில் , - ஐயோ ! திரள்பேர் 
பட்டு மடியும் வேளையில் ;
பேதைமை யோடு பிடிவாத மருள் மிகுந்து 
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே .     -ஜீவ 

2. காடுதனில் அலைந்தே, - கிறிஸ்தேசு 
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர் , கிராமந் தேடி நாம் பெற்றடைந்த 
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய .     -ஜீவ 

3. விண்ணின் மகிமை துறந்தார் , - கிறிஸ்து நமை 
மீட்கக் குருசில் இறந்தார் ;
மண்ணின் புகழ் , பெருமை எல்லாம் தூசுகுப்பை என் 
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.     -ஜீவ 

4. பூலோகம் எங்கும் நமையே , - கிறிஸ்து நாதர் 
போகச் சொல்லி விதித்தாரே ;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற 
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து .     -ஜீவ 


மா. வேதமாணிக்கம்