Satthaai Nishkalamaai
சங்கராபரணம்
ரூபகதாளம்
1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் ,
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே ,
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்-து ;
அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை , யாருறவே ?
2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மா றுண்டுகொலோ ? கடைகாறுங் கையடையாய் ,
சும்மா ரட்சணைசெய் , சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே ?
3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான் ,
பரசேன் பற்றுகிலேன் ; என்னைப்பற்றிய பற்றுவிடாய் ,
அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே ?
4. தாயே தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் ,
நீயே எம்பெருமான் , கதிவேறிலை நிண்ணயங்காண் ;
'ஏயே ' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை ?
ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை , யாருறவே ?
5. துப்பார் சின்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்ப தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள ,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமே டுத்த எங்கள்
அப்பா , உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே ?
எ . ஆ . கிருஷ்ணபிள்ளை
No comments:
Post a Comment